Friday, August 29, 2014

கணபதி

கணபதி
மதம் மறப்போம்!                    மனிதம் வளர்ப்போம்!!




வணக்கம் அன்புள்ளங்களே!

      நித்தம் விழாக்கால மனநிலையுடனும் கொண்டாட்ட மனநிலை மாறாமலும் இருக்கவே இக்கட்டுரை வரைகிறேன்.

       இந்து என்பது வரையறுக்கப்பட்ட வழிபாட்டு முறைச் சார்ந்தது இல்லை. ஆறு கிளை மதங்களான சௌரம், கணபாத்தியம். சாக்தம், கௌமாரம், வைணவம், சைவம் என்பதின் கூட்டு.

      பொதுவாக இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே. முகமதியர்கள், கிறிஸ்துவர்கள் என சில மதத்தவரைத் தவிர அனைவரும் இந்துக்கள் என்பதே வரையறை.

      நாம் இங்கே இயற்கை வழிபாட்டின் கட்டுண்ட இயல்பான மனிதர்கள் (காட்டு வாசிகள்) வணங்கியவற்றுள் உயர்வான கதிரவன் வழிபாட்டு முறையான சௌரத்திற்கு பின் கணபதி வழிபாட்டு முறை தோன்றியதை சற்று சிந்துப்போம்.

     இக்கட்டுரை எனது சிந்தனைத் தடத்திலிருந்து வெளிவருகிறது முரண்பாடு என உணர்வோர் தங்களது ஆலோசனையை கட்டாயம் தரலாம். அவசியமான கருத்து என்றால் ஏற்கத் தயார்.

கணபதி

     இயற்கையின் சீற்றத்தை உணர்ந்த இயல்பான மனிதர்கள் கதிரவனை வணங்குவதை முழுமையான அல்லது நிறைவாக ஒன்றாக ஏற்க முடியாமல் மேலும் ஆராய்ந்து முழு முதல் கடவுள் எது என எழுப்பிய கேள்வியின் பதிலே கணபதி ஆகும்.

       உள்ளதை உள்ளபடி வணங்கிய அதாவது காற்றை, நீரை, நெருப்பை, மலைகளை அப்படியே வணங்கியவன் சற்றே நிமிர்ந்து கதிரவனை வணங்கி அதனையும் கடந்து சிந்திக்க முற்பட்டதன் விளைவே கணபதி.

       கணபதி என்பது வேற்று கிரக வாசியின் பூமியின் வருகையால் உண்டாகி இருக்கலாம் என்று ஒருசிலரால் சிந்திக்கப்படுகிறது. கணபதி என்பது மனித உடலும் யானை முகமும் கொண்டதாக சிலை வடிக்கப்பட்டு இருப்பதால் யானை முகம் என்பதை வேற்று கிரகவாசியின் உடையாக எண்ணுகிறார்கள்.

     ஏலியன் பற்றி அதிகம் பேசப்பட்ட உடன் நம்மில் அநேகர் அதற்கு ஏற்றபடி சிந்திப்பது இயல்புதான். ஆனால் உண்மையான உண்மை என தீர்க்கமான முடிவை நாம் கண்டாக வேண்டும். ஏலியன்களை வணங்க வேண்டும் என்ற நினைப்பால் கணபதி உருவாக்கப்பட்டதா?. என்றால் இல்லை என்பதே தெளிவு.

     கணபதி என்று அழைக்கப்பட்டாலும் மொழி எல்லைக்குள் அதற்கு பல பெயர்கள் உண்டு. விக்னேஷ்வரன், விநாயகன், பிள்ளையார், என பல வகையில் அழைக்கப்படுகிறது. இவைகளை சற்று ஆழமாக பார்த்தால் வினைகளுக்கு எல்லாம் அதாவது செயல்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்ற பொருள்கொள்ளும் அளவிற்கே இருக்கும்.

        வடிவம் பொருத்த மட்டில் எங்கும் சற்று ஏறத்தாழ ஒற்றுமையுடனே காணப்படும். அதன் வடிவத்திற்கு புராணக் கதையும் புனையப்பட்டுள்ளது. அது.

            பார்வதி குளிக்கும் முன் தனது அழுக்கை திரட்டி பிள்ளையாக பெற்றதாகவும், அந்தப் பிள்ளை பார்வதியை சந்திக்க வந்த சிவனை தடுத்ததாகவும், சினம் கொண்ட சிவன் தலையை வெட்டி பின் பார்வதியால் உருவாக்கப்பட்டவன் என்று அறிந்து யானைத் தலை கொண்டு இணைத்ததாகவும் அக்கதை விரிகிறது.

       வியாயக வடிவத்திற்கு என்று சொல்லப்பட்ட கதை முற்கால மனிதன் தான் அறிந்த உண்மைகளை கதைகளாகவும், சிலைகளாகவும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வழித்தடம் அமைத்ததின் வெளிப்பாடு ஆகும்.
  
       ஏற்றத் தாழ்வுகள் அதிகம் இருந்த ஆண்டான் அடிமை அமைப்பு நிறைந்த காலத்தில் படித்தவர் என்பவர் குறைவு அதிலும் சிந்திக்க, எழுத என்றால் மிகவும் சொற்பமே. அப்படி ஒரு காலத்தில் புனையப்பட்டது கணபதி பற்றிய கதை.

       உடனே இக்கட்டுக் கதையை நம்பி பொம்மை அல்லது சிலை அல்லது இன்றைய ஒவிய வழிபாடு செய்வது தவறு என்பேன் என எண்ண வேண்டாம்.    

         கல்லை மண்ணை வணங்குவது இயற்கையை வணங்கும் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு வரும் பழக்கம். சிலை வழிபாடே அன்றைய காலத்தில் புரட்சிகர நாகரிக மாற்றம் என்றால் ஏற்க முடிகிறதா?.

      மலைக் குன்றுகளை வணங்கிய மனிதன் நாகரிகம் அடைந்து அவைகளை திருத்தி தனது எண்ணத்தை சிலைகளாக்கி வணங்கியது மிகப்பெரிய நாகரிக மாற்றம் என்பதை கால மாற்றத்தை கடந்து சிந்திக்க தெரிந்தவருக்குச் சாத்தியம்.

            கணபதியின் வடிவம் இருக்கட்டும் அதை பார்க்கும் முன் அது ஒரு உயிராகவும் அதற்கு ஒரு பிறந்த நாளும் உண்டு அது சதுர்த்தி நாள் ஆகும். சந்திரனை கண்டு நாட்களை கணித்து நன்மை தீமைகளை இந்நாளில் நடக்கும் என்று நம்பிய மனிதர்க்கு சதுர்த்தியும் நன் நாள் என்று உணர்த்தவே அந்த நாளில் பிறந்ததாக கதை புனைந்துள்ளது.

         புராணக் கதை எழுதியவர்கள் தமிழ் அறிவும் சமூக அக்கரையும் மனிதர்களின் நல்வாழ்வையும் கவனிக்க தவறியது இல்லை. என்பதே எனது எண்ணம். சில முரண்பட்ட கருத்து உருவங்களை செய்தவர்கள் உண்டு என்றாலும் பெரும்பகுதி பழைய எழுத்தர்கள் நன்ணெண்ணம் கொண்டவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.

         அறியாமையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பிறரையும் காக்கும் நோக்கிலே எழுதிய கதைகள் ஆழமான பொருள் பொதிந்தது. அதே சமயத்தில் நேரடி பொருள் தருவதே இல்லை. காரணம் அன்றைய மனித அறிவு இன்றைய சுழல்போல் இல்லாமல் சதாரணமாக இருந்தது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று எண்ணிக் கூட பார்க்காதச் சுழலில் குழுக் குறியாக மொழியைப் பயன்படுத்திய காலத்தில் புனையப்பட்ட அற்புதமான ஒன்றே கணபதி.

         பொதுவாக கொண்டாட்டத்திற்கு தனிப்பட்ட நாட்கள் ஒதுக்கியது ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் அன்றி மேல் தட்டு மனிதர்கள் அல்லது மன்னர்கள் என்றும் கொண்டாட்டத்துடனே இருந்தார்கள் என்பதே வரலாற்று உண்மை. இன்றைய மனிதன் கொண்டாடி மகிழ விநாயகர் சதுர்த்தி என்ற நாள் தேவைபடுகிறது என்றால் இன்னும் முழுமையான நித்தம் மகிழும் வண்ணம் வாழ்க்கை அமையவில்லை என்பதே உண்மை.

        மேலும், வணிகர்களின் வியாபாரத்திற்கு உறுதுணையாக விழாக்கள் அமைந்துவிட்டன. இதுபோன்ற பல காரணங்களால் கணபதி என்பதின் உண்மைப் பொருள் சிதைந்து வெறும் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்தும் மனிதர்களுக்கு. மனிதனை ஏய்த்து பிழைக்கும் பூசாரிகளுக்கு, கடவுளைப் பற்றி அச்சத்தை உண்டாக்கி வாழும் மத போதகர்களுக்கு, எதையாதவது பேசி ஆன்மீக உரை என்று உளரும் அற்பர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது.

        கணபதி என்பது ஏக இறையின் மற்றொரு பெயர். கணங்கள் என்பது பஞ்ச பூதம் எனப்படும் வான், காற்று, நெருப்ப, நீர், மண் என கணங்களுக்கு பதியானவன் என பொருள். விநாயகம் என்பதும் வினைகளுக்க நாயகன் எனப் பொருள் படும் ஏக இறையைக் குறிக்கும்.

     சரி கணங்களின் பதி இப்படியா யானை முகம் கொண்டு இருக்கும் என்றால் சிந்திக்க தெரிந்த சிறு பிள்ளைகள் கூட ஏற்றுக் கொள்ளாது. அப்படி என்றால் புனைக்கதை போலியானதா என்றால் அதுவும் இல்லை.

     சிலைகள் பல வடிவத்தில் இருக்கும் கணபதி இப்படி என்றால் அம்மன், பொருமாள், சிவன், இலிங்கம், என தெய்வங்கள் பல வடிவில் இருப்பதை காணலாம். அடிப்படையில் சிலைகள் வாழ்ந்த மனிதர்களின் வடிவம் அல்லது உருவகமாக அதாவது மறைப் பொருள் உணர்ந்தும் விதமாக இருக்கும். சிலைகளைப் பார்த்து வணங்குவதைக் காட்டிலும் அவைகள் நமக்கு உணர்த்தும் பொருள் என்ன என்று சிந்திப்பதே நான்று.

      ஆற்றலின் குறியீடாக இலிங்கமும். அன்றைய மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் படியாக பல சிலைகளும் இருக்க கணபதி மட்டும் மாறுபட்டு இருப்பதாக எண்ணமுடியாது. வைணவத்தார் பரிணாம வளர்ச்சியை உணர்த்த மீன், ஆமை, பன்றி, சிங்கம் என பல தரப்பட்ட விலங்களின் வடிவத்தை சுமந்த மனித உருவத்தை வைத்து வணங்குவதைக் கொண்டு உணரலாம்.

      ஏகாந்தமான இறையை உணர்ந்த ஒருவரால் தான் இந்த புனைக்கதை செய்யப்பட்டு இருக்கும் என்பது என் எண்ணம்.            
     கணங்களின் பதியான ஏகத்தை தனக்குள் அறிய வாய்ப்பளிக்கும் நோக்கில் கணபதியின் வடிவமும் கதையும் அமைந்துள்ளது.

# ஒரு தாயின் தூமை திரண்டே நான் உருவாகினேன் என்று உணர அல்லது உணர்த்த பார்வதி அழுக்கை திரட்டி பிள்ளை செய்தால்.

# ஏகமான இறையை அறியாதபடி நான் என்ற ஆணவமே தடுக்கிறது. என்று உணர அல்லது உணர்த்த தாயை சிவன் சந்திக்க தடையாக்கியது.

# ஆணவத்தை ஏகனே அழிக்க வல்லவன் என்று உணர உணர்த்த கணபதியின் தலை வெட்டப்பட்டது.

# ஆணவத்தை அழித்தவன் மீண்டும் புதிதாய் பிறக்கிறான் என்று உணர உணர்த்த யானைத் தலை வைக்கப்படுகிறது.

# அப்படி ஏகனை அறிந்தவன் நீண்ட சுவாசமும் கூரிய பார்வையும் நாதம் கேட்டலும் தன்னைத் தானே அடக்கும் ஆற்றலும் பெற்றுவிடுகிறான் என்று உணர உணர்த்த நீண்ட மூக்கு, கூரிய கண், விரிந்த காது உடைந்த தந்தம் கொண்ட யானை முகமாக வைக்கப்பட்டுள்ளது.

     இக்கட்டுரை படிந்து தனக்குள் இறை உணரும் ஆர்வத்தை பெறுபவற்கு சமர்பணம்.

என்றும் என்றென்றும்
அன்புடன்

சிவயோகி.